எம்மைப் பற்றி

எமது கல்விக்கூடத்தின் பதினைந்து ஆண்டுகள் வளர்ச்சிப் பெருமிதத்தில், புதிய இணையத்தளத்துடன் புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் காலடி எடுத்து வைக்கிறோம். எமது ஆசிரியர்களின் விடாமுயற்சியும், அயராத உழைப்பும், அறிவுத் தேடலில் அவர்களுக்கு இருந்த ஆர்வமுமே எம் கல்விக் கூடத்தினதும் மாணவரினதும் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாய் அமைந்தன. அத்துடன் பெற்றோரின் பூரணமான ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் தொடர்ந்து எம்மை மிகவும் உற்சாகப்படுத்துவதாய் அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுப்பசியைத் தீர்த்துக் கொள்வதில் எம் இளந்தலைமுறைக்கு இருக்கும் ஆர்வமும், ஈடுபாடும் எம் கல்விக்கூட வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கின்றன.

பெற்றோர், மாணவர்களுடனான தகவற்பரிமாற்றத்தை வளப்படுத்தும் நோக்கில் இவ்விணையத்தளம் பதினைந்தாவது ஆண்டில் உருவாக்கம் பெற்றுள்ளது. எதிர்வருங்காலத்தில் எமது பேர்கன் அன்னை பூபதி வளாகத்தின் திட்டங்கள், நிகழ்வுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தும் ஒரு பாரிய கடமையை இவ்விணையத்தளம் கொண்டிருக்க வேண்டும் என்பதே எமது எண்ணம்..

கடந்த ஒரு வருட வளர்ச்சி எமக்கு மிகவும் திருப்தியைத் தந்த போதிலும், எம் இளந்தலைமுறை சார்ந்த வேலைத்திட்டங்கள் பலவும் இன்னமும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுக்கப்பட்டு, புலம்பெயர்சூழலில் தம் அடையாளத்தைத் தேடும் எம் இளம் சமூகம், தம் இனம், மொழி, மண் பற்றிய வரலாற்றுத் தெளிவு உடையவராய் இருப்பது, எதிர்காலத்தில் அவரைத் தொலைந்து போன சமூகமாக மாறவிடாமல் தவிர்க்கும்.

எம் சமூகத்தின் தேவைக்காய் உயிர் பெற்ற எம் அன்னைபூபதி பேர்கன் வளாகத்தின் உயிர்மூச்சாய் நிற்கும் மாணவர், பெற்றோர், ஆசிரியர், அன்புள்ளங்கள் அனைவரும், உறுதியுடனும், உற்சாகத்துடனும் ஒன்றிணைந்து எம் சமூகத்தின் வளர்ச்சிக்காய் தொடர்ந்தும் உழைப்போமென உறுதியெடுத்துக் கொள்வோம்.

தயாளன் வேலாயுதபிள்ளை

அதிபர், பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்.

Scroll to Top